Tuesday 29 November 2011

'கனி' இனி?

கனிமொழி ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில், இனி அவர் என்ன செய்ய போகிறார்? கட்சி அவருக்கு என்ன செய்யப் போகிறது? இது தான் இன்றைக்கு "Talk of the Tamilnadu". உடன்பிறப்புகளை தாண்டி, ஒவ்வொரு அரசியல் ஆர்வலரும் ஆவலோடு எதிர் நோக்கும் கேள்வி இவைதான்.

இந்த நேரத்தில் கட்சியின் உறுப்பினராய் தலைமைக்கும், சக உடன்பிறப்பாய் கனிமொழி அக்காவுக்கும் என் கருத்துக்களை எடுத்துச்  சொல்ல வேண்டியது என் தார்மீக கடைமை.
முதலில் தலைமைக்கு :
இப்பொழுது கனிமொழி அக்காவை நீங்கள் அமைச்சராக்க வேண்டாம். கட்சியின் பெரிய பொறுப்புகளை அவர் தலைமையில் சுமத்த வேண்டாம். அதே நேரத்தில் அவர் இப்பொழுது வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்த்துவிடவும் வேண்டாம். இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்போதும் தயவு செய்து அவருக்கென்று ஒரு ராஜ்யசபா சீட்டை நிரந்தரமாக‌ ஒதுக்கி விடுங்கள். அவரைப் போல் சுய சிந்தனை உள்ள, கொள்கை பிடிப்பு கொண்ட, ஆங்கிலப் புலமை மிக்க‌ ஒரு குரல் தலைநகரில் ஒலிக்க வேண்டியது கட்டாயத் தேவை.
இனி கனிமொழிக்கு :
அன்பு அக்காவுக்கு, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் மீதிருக்கும் வழக்கு முடியும் வரை அதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நடந்தது என்ன என்பதை விரைவில் இந்த நாடே அறியும். இதுவரை எப்படி இருந்தீர்களோ தெரியாது, இனி நீங்கள் உங்கள் பாதையை தெளிவாக வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். முன்பு நீங்கள் இலக்கியத் தடத்தில் இருந்தபோது, அரசியல் தடத்தில் உங்கள் பார்வையை செலுத்தியதில்லை. அரசியல் தடத்தில் நுழைந்த‌ போது, இலக்கியத் தடத்தை திரும்பிப் பார்த்ததில்லை.  இதுவரை எப்படி இருந்தீர்களோ பரவாயில்லை, இனி தயவு செய்து இரண்டு பாதையிலும் பயணம் செய்யுங்கள். இலக்கியத்தில் அரசியல் பேசுங்கள், அரசியலில் இலக்கியம் வெளிப் படட்டும்.  நாடாளுமன்ற விவாதங்களில் மட்டுமின்றி CNN,NDTV போன்ற ஆங்கிலச் சேனல்களில் நடைபெறும் விவாதங்களிலும் திராவிட பிரதிநிதியாக கலந்துக் கொள்ளுங்கள்(முன்பைவிட தீவிரமாய்). நீங்கள் முன்பு மேற்கொண்ட தமிழ் கலைகளை வளர்க்கும் முயற்சிகளையிம் கைவிட்டு விடாதீர்கள். முடிந்தால் இணையதளங்களிலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
 "தம்பி உடையான்
  படைக்கு அஞ்சான்"


லட்சக்கணக்கான உடன் பிறப்புகள் சார்பாக‌
இ.அருண்மொழிதேவன்.

Monday 14 November 2011

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக மாற்றம், பரமக்குடி தலித் படுகொலைகள் - எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் கண்டன ஆர்பாட்டம்

 
 
அன்புடையீர்,

அறிவுலகத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசின் அறிவிப்பு நம் மனங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கும் நிலையில், கொழுந்து விட்டு எரியும் அந்தத் தீயை அணைக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? நம் எதிர்ப்பை தெரிவிக்க ஆங்காங்கே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நம் கருத்துக்களை எடுத்து வைத்தாலும், நாம் ஒன்று கூடி நமக்கு நேர்ந்த இந்த அவமானத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது கடமையல்லவா?

தமிழக அரசு தலித்துகளின் உயிரை கிள்ளுக்கீரையாய் நினைத்து பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலியானோர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே வழங்கி, தலித்துகளின் உயிரை மலிவெனக் கருதுவதை வெளிப்படுத்தியது. கண் துடைப்பு விசாரணை கமிஷன் ஒன்றை நிறுவியிருக்கும் தமிழக அரசின் செயல், பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல். தவறு செய்பவரும், தண்டிப்பவரும் ஒருவரேயெனில் நியாயமும் நீதியும் எப்பக்கம் செல்லும் என்பது திண்ணம். ஆகவே, சி.பி.ஐ விசாரணை கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரக் கோரியும் எழுத்தாளர்களாகிய நாம் ஒடுக்கப்ப்ட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகவும், அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் 20, ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திரள்வோம் நண்பர்களே! நம் எதிர்ப்பை தெருவில் இறங்கி முழங்குவோம். தமிழ்நாடெங்கிலும் இருந்து தங்கள் கடமையெனக் கருதி நண்பர்கள் புறப்பட்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம். தனிநபராகவோ, தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பிலோ எப்படியாயினும், தங்கள் பங்கேற்பு இன்றியமையாதது!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒலிக்கப் போகும் நம் கண்டனக் குரல்கள் அறிவுலகின் மீது விடப்பட்டுள்ள சவாலின் எதிர்வினை.

நம் எதிர்ப்புக் குரலின் வலிமையில் கோட்டைக் கதவுகள் திறந்து கொள்ளட்டும்!

சென்னை நோக்கி அணிவகுத்து வாருங்கள்!

நண்பர்கள் இதை உங்கள் முகநூல் பக்கத்திலும் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

இப்படிக்கு

எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப், வ.கீதா, பிரின்ஸ் கஜேந்திர பாபு, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அழகிய பெரியவன், அரங்க மல்லிகா, சந்திரா, தி.பரமேஸ்வரி, கம்பீரன், விஷ்ணுபுரம் சரவணன்,கவின் மலர்
தொடர்புக்கு : 98411 55371, 93603 33336, 94437 54443

Sunday 6 November 2011

கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க‌ மட்டும் டெல்லிக்கு நேரில் சென்றார், ஈழப்பிரச்சினைக்கு கடிதம் மட்டும் எழுதினார் என்ற குற்றச்சாட்டுப் பற்றி?

ஈழப் பிரச்சினைத் தொடர்பாக நேரில் சென்றிருந்தாலும் கலைஞரால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக தமிழகத்தில் தன் ஆட்சியை இழந்திருப்பார், அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். மத்திய அரசில் தமிழகத்துக்கான பிரதிநுவத்துவம் குறைந்திருக்கும். இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் அதே 2009ல் 59நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரையிம், சோனியாவையிம் நேரில் சென்று பார்த்தார்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் கடைசியில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு வேளை கலைஞர் அந்த நேரத்தில் மத்திய அரசை மிரட்டி ஆட்சியை ஜெயலலிதாவிடம் தாரை வார்த்துக் கொடுத்திருந்தால் இன்றைக்கு கலைஞரை இனத்துரோகி என விமர்சிக்கும் தமிழ் தேசியவாதிகள் அன்றைக்கு சுதந்திரமாக வெளியில் நடமாடியிருக்கக் கூட முடியாது!.

கலைஞரின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்று சொல்வதைப் பற்றி?

அந்த உண்ணாவிரதத்தைப் பற்றி ஜெயலலிதா சொல்லும் போதெல்லாம் "காலை உணவை சாப்பிட்டு விட்டு வந்து உண்ணாவிரதம் இருந்தார், மதிய உணவுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்" என்று கிண்டல் செய்வார். ஆனால் அந்த காலக்கட்டங்களில் அவரால் பாதி மசால்வடைக் கூட சாப்பிட முடியாது . மூன்று வேளையிம் வெறும் கஞ்சி மட்டும்தான் உண்டு வந்தார். அவர் எப்பொழுதும் காலை உணவை சாப்பிடுவது அண்ணா அறிவாலயத்திற்கு சென்று வந்த பின்புதான் ஆனால் அன்றைக்கு அறிவாலயம் செல்வதாய் சொல்லிவிட்டு சென்றவர் பாதி வழியிலேயே வண்டியை அண்ணா நினைவிடத்துக்கு திருப்பச் சொல்லி உண்ணாவிரதத்தில் அமர்ந்து விட்டார். மதியம் போரை நிறுத்துவதாய் மத்திய அரசிடம் இலங்கை அரசு கூறிய பிறகுதான் உண்ணாவிரத்தை வாபஸ் வாங்கினார். அதைப் போல அடுத்த ஒரு வாரத்திற்கு பெரிதாக இலங்கை அரசு யுத்தத்தில் ஈடுபடவில்லை. பின்பு அந்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறியது வேறு விஷயம். இது "கலைஞரின் பேச்சை நம்பி அப்பாவி மக்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்ததனால்தான் இறந்தார்கள்" என்று சொல்பவர்களுக்கும் பொறுந்தும். இதில் அவர்களின் விமர்சணத்தில் உள்ள ஒரு பிழை என்னவென்றால் கலைஞரின் பேச்சை நம்பி யாரும் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்திருக்க வாய்பில்லை. ஒரு வாரமாய் குண்டு சத்தம் இல்லாததால்தான் வெளியே வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் பதுங்கு குழியில் தொலைக்காட்சி, ரேடியோ போன்ற வசதிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசியில் சொல்ல வருவது?
கலைஞர் இனத்துரோகி இல்லை. காங்கிரஸ் என்ற பசுந்தோல் போர்த்திய புலியிடம் ஏமாந்த வயதானக் காளை.

Thursday 22 September 2011

எங்கேயும் எப்போதும் - துளிகள்

* இயக்குனர் சங்கர் தனது முதல் தயாரிப்பான "காதல்" படத்தில் தந்த அதிர்ச்சியை விட அதிகமான அதிர்சியைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது முதல் தயாரிப்பில்.

* சில படங்களைப் பார்க்கும் பொழுது "என்ன கொடுமை சரவணன் இது?" என்று கமெண்ட் அடிக்கத் தோன்றும். ஆனால் இந்தப் படத்தை இயக்கியவரின்  பெயர் சரவணனாகவே இருந்தாலும் "Hats Off சரவணன்" என்றே சொல்லத் தோன்றுகிறது.

* இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், குறைந்தப் பட்சம் வீட்டிற்குச் செல்லும் வரையாவது சாலை விதிகளை மதிப்பார்கள் என்பது சத்தியம்.

* இந்தப் படத்தில் "அஞ்சலி" நடக்க வேண்டியக் கேரக்டரில், முதலில் "அமலாபால்"தான் நடிப்பதாக இருந்தது. சிலப் பிரச்சனைகளால்தான் "அஞ்சலி" கதாநாயகியானார். இப்பொழுது "அஞ்சலி"யின் நடிப்பைப் பார்த்தப் பின் அந்த இடத்தில் வேறொரு நடிகையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

* "எங்கேயும் எப்போதும்" படத்தில் "எங்கேயும் எப்போதும்" நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பவர்கள் கேமிராமேன் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சத்யா. இயக்குனரின் கதையை கவிதையாக்கியப் பெருமை இவர்களையேச் சேரும்.

Friday 19 August 2011

முதல்வருக்குச் சில கேள்விகள்



* புதிய கட்டிடத்தில் எந்த நேரத்தில் எது இடிந்து விழுமோ? என தெரியாது. எனவே அந்த கட்டிடத்தில் தலைமைச் செயலகம் அமைக்க முடியாது என்று சொன்ன அம்மையார் அவர்களே! இப்பொழுது அந்த கட்டிடத்தில் நோயாளிகள் தங்கினால் மட்டும் இடிந்து விழாதா?

* அந்த கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி கட்டுமானத்தை நிறுத்தி வைத்து நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தீர்களே! அது ஏன்?

* நீங்கள் கடந்த ஆட்சியிலேயே புதிய சட்டமன்றம் கட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியை இடிக்க போனீர்கள்.கேட்டால் ஜார்ஜ் கோட்டையில் விரிசல் என்றீர்கள்! வாடகைக் கட்டிடம் என்றீர்கள்! எப்படி பார்த்தாலும் சட்டமன்றத்திற்கு புதிய கட்டிடம் என்பது அவசியமாகிறது. எனவே நீங்கள் மீண்டும் ஒரு புதிய தலைமைச் செயலகம் கட்டபோகிறீர்களா?

Tuesday 19 July 2011

2000வது டெஸ்ட்

                        இன்றைக்கு கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டி,  ஜீலை 21ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டிதான். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2000வது டெஸ்ட் என்ற சிறப்பு ஒரு புறம் இருக்க, முன்னாள், இந்நாள் வீரர்கள் ஊடகங்களில் கொடுத்துக் கொண்டிருக்கும் பேட்டிகள் ஒரு புறம் பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. போதாக் குறைக்கு சச்சின் தனது நூறாவது சர்வதேச சதத்தை, இதுவரை ஒருமுறைக்கூட சதம் அடிக்காத புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு வேறு இதயத்துடிப்பை டரியலாக்கிக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்துப் பார்ப்போம் ஜெயிக்கப் போவது கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப் படுத்திய  இங்கிலாந்தா? இல்லை கிரிக்கெட்டை அங்கீகரிக்கபடாத மதமாக கொண்டாடும் இந்தியாவா? என்று.

Monday 11 July 2011

வேங்கை

பாரதிராஜாவுக்கு "மண்வாசனை" என்றால் ஹரிக்கு "ரத்தவாசனை".தன் அக்மார்க் ரத்தம்+அருவா டிரேடுடன் ஹரி கொடுத்திருக்கும் படம் "வேங்கை".அருவா,டாட்டாசுமோ,குவாலிஸ் வகையறா கார்கள் இல்லாமல் தன்னால் படம் எடுக்க முடியாது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இயக்குனர்."கோவக்காரன் அருவா எடுத்தா தப்பு.காவக்காரன் அருவா எடுத்தா தப்பு இல்ல" இதுதான் படத்தோட ஒன் லைன்.இப்படிதான் எல்லா பேட்டியிலும் சொல்லி பில்டப் குடுத்தார் ஹரி.படம் பாத்த எனக்கு அந்த ஒன்லைன் சுத்தமா வெளங்கவே இல்லை.படத்தின் கதை பெரிசா ஒன்னும் இல்லை.
சிவகங்கை பக்கத்துல உள்ள ஒரு சின்ன கிராமத்தோட பெரிய மனுசன் "ராஜ்கிரண்".அவர் சொன்னா அந்த ஊர் மட்டும் இல்ல சுத்து வட்டாரத்துல எல்லா ஊர் மக்களும் கேப்பாங்க.அப்படி அவர் சொல்லி தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயித்த எம்.எல்.ஏ வாய் பிரகாஷ்ராஜ்.பிரகாஷ்ராஜ் எம்.எல்.ஏ வாக இருந்தாலும் ராஜ்கிரணின் அனுமதியின்றி எந்த திட்டத்தையோ,டெண்டரையோ நிறைவேற்ற முடியாது.இதானால கடுப்பாயி அவர போட்டுத்தள்ள நினைப்பார்.அது கஷ்டம்ங்கிறதால "ஊரில் இருந்தால் கெட்டுப்போயிடுவான்" என்பதால் ராஜ்கிரணால் திருச்சிக்கு அனுப்பப் பட்ட அவரது மகன் தனுஷை போட்டுத் தள்ள முடிவேடுப்பார் பிரகாஷ்ராஜ்.அது முடியாமல் போய்விடும்.சில திருப்பங்களுக்குப் பிறகு அமைச்சராகிவிட்ட பிரகாஷ்ராஜ் ராஜ்கிரண் தலையை எடுக்க நினைப்பார்.இது தெரிந்த தனுஷ் பிரகாஷ்ராஜ் தலையை எடுப்பதாக சவால்விடுவார்.கடைசியில் யார்தலையை யார் எடுத்தார் என்பதுதான் கிளைமாக்ஸ்.சொல்ல மற்ந்துட்டேன் இடையில் தம்ன்னாவுடன் காதல் வேறு உண்டு.

மொத்தத்தில் சண்டை,காதல்,காமெடி,செண்டிமென்ட்,பஞ்ச்டயலாக் என காக்டெயிலாக வெளிவந்திருக்கும் அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம். கமர்ஷியல் திரைப்படம் எனும்போது லாஜிக்கெல்லாம் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கில்லை. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள்,பிண்ணனி இசை எல்லாமே சுமார் ரகம்தான். எல்லாப் பாடல்களிலும் தெலுங்கு வாசனை வீசுகிறது.நடிப்பைப் பொறுத்தவரை தனுஷ் மட்டும் தான் இம்ப்ரஸ் செய்கிறார். பட் தனுஷைவிட விஷால் நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்திருப்பார். ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ் போன்ற ஜாம்பவான்கள் கூட ஏற்கனவே பலமுறை நடித்த பாத்திரங்களிலேயே நடித்திருப்பதால் பெரிதாக என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை.இரண்டு காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டியிருந்தாலும் ஒய்.ஜி.மகேந்திரனின் முகபாவனை அருமை. திறமையான ஒரு நடிகரை வேஸ்ட் செய்துவிட்டார்கள்.தமன்னாவுக்கு இந்தப் படத்தில் காதலிப்பதை விட அதிகமாக அழுவதுதான் வேலை.காமெடியைப் பொறுத்தவரை கஞ்சாகருப்பு வரும் காட்சிகளைவிட பொன்னம்பலம் வரும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. பிரகாஷ்ராஜ் கோபத்தில் ஒவ்வொரு செல்போனாக உடைக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். படத்தில் பல காட்சிகள் குறிப்பாக பிரகாஷ்ராஜ் வரும் காட்சிகள் ஹரியின் முந்தைய படத்தை ஞாபகப் படுத்துகின்றன.இருந்தாலும் ஹரியின் விருவிருப்பான திரைக்கதை அவற்றை மறக்கடித்து விடுகிறது.

கடைசியா திருச்சிக்காரனான எனக்கு ஒரு சந்தேகம் "திருச்சியை மையப்படுத்தி எடுக்கும் எல்லாப் படங்களிலும் ஹீரோயினை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவராகவே காட்டுவது ஏன்?"

Wednesday 6 July 2011

திருவனந்த புரம் பத்மநாப சாமி


திருவனந்த புரம் பத்மநாப சாமி கோயிலில் கிடைத்த புதையலை என்னச் செய்யலாம்?அரசு கஜானாவில் சேர்க்கலாமா?கண்டிப்பாகக் கூடாது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கலாமா?ம்ம்கூம் கூடவே கூடாது. வேறு என்னதான் செய்யலாம்?முதலில் பத்மநாப சாமி பெயரில் ஒரு அறக்கட்டளைத் துவங்க வேண்டும்(வேண்டுமென்றால் இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கலாம்).இந்த அறக்கட்டளை இப்பொழுது கிடைத்திருக்கும் பொக்கிசத்தை பாதுகாக்க மட்டும் அல்ல. இனி வரப் போகும் வருமானத்தையிம் முறைப்படுத்த.எப்படியிம் இப்ப ஒரு நாளைக்கு 500பேர் வந்துக்கிட்டுருந்தா.. இனிமே  குறைந்தது 2500பேராவது வருவாங்க(பத்மநாப சாமிக்கு கெடச்சிருக்குற பப்ளிகுட்டி அப்படி).அடுத்த‌து இப்பொழுது கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாப் பொருட்களை புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளுக்குப் பிறகு அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, உபரியாக இருக்கும் நாணயங்கள் மற்றும் பொருட்களை(உதாரணத்திற்கு ஒரேக் காலத்தைச் சேர்ந்த, ஒரே மதிப்புடைய, ஒரே வடிவமுடைய நாணயங்கள் 1000 இருப்பின் அவற்றில் பத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை) ஏலம் விட்டு அந்த வருமானத்தையிம் கோவில் திருப்பணிகளுக்கும், மக்கள் நலப்பணிகளுக்கும் செலவிடலாம்.

தைரியமான தமிழன்



என்றைக்குத் தான் இந்த வீரம் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு வாய்க்குமோ?

Tuesday 5 July 2011

ஒரு மகிழ்சி

சென்ற வாரத்தில் நான் செய்த,என் மனதுக்கு மகிழ்சியளித்த ஒரே விஷயம் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் என் தோழிக்கு, அவள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கட்டுரைகள் தயார் செய்து கொடுத்ததுதான். கட்டுரைகளின் தலைப்பு "கொடைவள்ளல் எத்திராஜ்" மற்றும் "தலைவர் நீங்கள் நீங்கள்தான்"(பெருந்தலைவர் காமராஜர் பற்றியது).நான் பள்ளிநாட்களிலும்,பின்னரும் விரல்விட்டு எண்ணக் கூடிய‌ மேடைகளில் பேசியிருக்கிறேன் பரிசும் பெற்றிருக்கிறேன்.ஆனாலும் இப்பொழுது எழுதியக் கட்டுரைக்கு அவள் கொஞ்சும் தமிங்கிலிஸில் சொன்ன "Thanks நல்லாருக்கு" என்ற வார்த்தைக்கு ஈடான பரிசைப் பெற்றதில்லை.அவள் நன்றாக பேச என் வாழ்த்துக்கள்.

தொடக்கம்


வெனிசுவேலா,அல்ஜீரியா ,கேப் வேர்ட் விடுதலை பெற்ற நாளில்
ஆர்மீனியா அரசியலமைப்பு தினத்தில்
தமிழீழ கரும்புலிகள் தினத்தில்
இந்த வலைப்பூவும் தொடங்கப் பட்டது