Tuesday 29 November 2011

'கனி' இனி?

கனிமொழி ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில், இனி அவர் என்ன செய்ய போகிறார்? கட்சி அவருக்கு என்ன செய்யப் போகிறது? இது தான் இன்றைக்கு "Talk of the Tamilnadu". உடன்பிறப்புகளை தாண்டி, ஒவ்வொரு அரசியல் ஆர்வலரும் ஆவலோடு எதிர் நோக்கும் கேள்வி இவைதான்.

இந்த நேரத்தில் கட்சியின் உறுப்பினராய் தலைமைக்கும், சக உடன்பிறப்பாய் கனிமொழி அக்காவுக்கும் என் கருத்துக்களை எடுத்துச்  சொல்ல வேண்டியது என் தார்மீக கடைமை.
முதலில் தலைமைக்கு :
இப்பொழுது கனிமொழி அக்காவை நீங்கள் அமைச்சராக்க வேண்டாம். கட்சியின் பெரிய பொறுப்புகளை அவர் தலைமையில் சுமத்த வேண்டாம். அதே நேரத்தில் அவர் இப்பொழுது வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்த்துவிடவும் வேண்டாம். இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்போதும் தயவு செய்து அவருக்கென்று ஒரு ராஜ்யசபா சீட்டை நிரந்தரமாக‌ ஒதுக்கி விடுங்கள். அவரைப் போல் சுய சிந்தனை உள்ள, கொள்கை பிடிப்பு கொண்ட, ஆங்கிலப் புலமை மிக்க‌ ஒரு குரல் தலைநகரில் ஒலிக்க வேண்டியது கட்டாயத் தேவை.
இனி கனிமொழிக்கு :
அன்பு அக்காவுக்கு, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் மீதிருக்கும் வழக்கு முடியும் வரை அதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நடந்தது என்ன என்பதை விரைவில் இந்த நாடே அறியும். இதுவரை எப்படி இருந்தீர்களோ தெரியாது, இனி நீங்கள் உங்கள் பாதையை தெளிவாக வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். முன்பு நீங்கள் இலக்கியத் தடத்தில் இருந்தபோது, அரசியல் தடத்தில் உங்கள் பார்வையை செலுத்தியதில்லை. அரசியல் தடத்தில் நுழைந்த‌ போது, இலக்கியத் தடத்தை திரும்பிப் பார்த்ததில்லை.  இதுவரை எப்படி இருந்தீர்களோ பரவாயில்லை, இனி தயவு செய்து இரண்டு பாதையிலும் பயணம் செய்யுங்கள். இலக்கியத்தில் அரசியல் பேசுங்கள், அரசியலில் இலக்கியம் வெளிப் படட்டும்.  நாடாளுமன்ற விவாதங்களில் மட்டுமின்றி CNN,NDTV போன்ற ஆங்கிலச் சேனல்களில் நடைபெறும் விவாதங்களிலும் திராவிட பிரதிநிதியாக கலந்துக் கொள்ளுங்கள்(முன்பைவிட தீவிரமாய்). நீங்கள் முன்பு மேற்கொண்ட தமிழ் கலைகளை வளர்க்கும் முயற்சிகளையிம் கைவிட்டு விடாதீர்கள். முடிந்தால் இணையதளங்களிலும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
 "தம்பி உடையான்
  படைக்கு அஞ்சான்"


லட்சக்கணக்கான உடன் பிறப்புகள் சார்பாக‌
இ.அருண்மொழிதேவன்.

Monday 14 November 2011

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக மாற்றம், பரமக்குடி தலித் படுகொலைகள் - எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் கண்டன ஆர்பாட்டம்

 
 
அன்புடையீர்,

அறிவுலகத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசின் அறிவிப்பு நம் மனங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கும் நிலையில், கொழுந்து விட்டு எரியும் அந்தத் தீயை அணைக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? நம் எதிர்ப்பை தெரிவிக்க ஆங்காங்கே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நம் கருத்துக்களை எடுத்து வைத்தாலும், நாம் ஒன்று கூடி நமக்கு நேர்ந்த இந்த அவமானத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது கடமையல்லவா?

தமிழக அரசு தலித்துகளின் உயிரை கிள்ளுக்கீரையாய் நினைத்து பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலியானோர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே வழங்கி, தலித்துகளின் உயிரை மலிவெனக் கருதுவதை வெளிப்படுத்தியது. கண் துடைப்பு விசாரணை கமிஷன் ஒன்றை நிறுவியிருக்கும் தமிழக அரசின் செயல், பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல். தவறு செய்பவரும், தண்டிப்பவரும் ஒருவரேயெனில் நியாயமும் நீதியும் எப்பக்கம் செல்லும் என்பது திண்ணம். ஆகவே, சி.பி.ஐ விசாரணை கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரக் கோரியும் எழுத்தாளர்களாகிய நாம் ஒடுக்கப்ப்ட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகவும், அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் 20, ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திரள்வோம் நண்பர்களே! நம் எதிர்ப்பை தெருவில் இறங்கி முழங்குவோம். தமிழ்நாடெங்கிலும் இருந்து தங்கள் கடமையெனக் கருதி நண்பர்கள் புறப்பட்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம். தனிநபராகவோ, தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பிலோ எப்படியாயினும், தங்கள் பங்கேற்பு இன்றியமையாதது!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒலிக்கப் போகும் நம் கண்டனக் குரல்கள் அறிவுலகின் மீது விடப்பட்டுள்ள சவாலின் எதிர்வினை.

நம் எதிர்ப்புக் குரலின் வலிமையில் கோட்டைக் கதவுகள் திறந்து கொள்ளட்டும்!

சென்னை நோக்கி அணிவகுத்து வாருங்கள்!

நண்பர்கள் இதை உங்கள் முகநூல் பக்கத்திலும் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

இப்படிக்கு

எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப், வ.கீதா, பிரின்ஸ் கஜேந்திர பாபு, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அழகிய பெரியவன், அரங்க மல்லிகா, சந்திரா, தி.பரமேஸ்வரி, கம்பீரன், விஷ்ணுபுரம் சரவணன்,கவின் மலர்
தொடர்புக்கு : 98411 55371, 93603 33336, 94437 54443

Sunday 6 November 2011

கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க‌ மட்டும் டெல்லிக்கு நேரில் சென்றார், ஈழப்பிரச்சினைக்கு கடிதம் மட்டும் எழுதினார் என்ற குற்றச்சாட்டுப் பற்றி?

ஈழப் பிரச்சினைத் தொடர்பாக நேரில் சென்றிருந்தாலும் கலைஞரால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக தமிழகத்தில் தன் ஆட்சியை இழந்திருப்பார், அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். மத்திய அரசில் தமிழகத்துக்கான பிரதிநுவத்துவம் குறைந்திருக்கும். இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் அதே 2009ல் 59நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரையிம், சோனியாவையிம் நேரில் சென்று பார்த்தார்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் கடைசியில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு வேளை கலைஞர் அந்த நேரத்தில் மத்திய அரசை மிரட்டி ஆட்சியை ஜெயலலிதாவிடம் தாரை வார்த்துக் கொடுத்திருந்தால் இன்றைக்கு கலைஞரை இனத்துரோகி என விமர்சிக்கும் தமிழ் தேசியவாதிகள் அன்றைக்கு சுதந்திரமாக வெளியில் நடமாடியிருக்கக் கூட முடியாது!.

கலைஞரின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்று சொல்வதைப் பற்றி?

அந்த உண்ணாவிரதத்தைப் பற்றி ஜெயலலிதா சொல்லும் போதெல்லாம் "காலை உணவை சாப்பிட்டு விட்டு வந்து உண்ணாவிரதம் இருந்தார், மதிய உணவுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்" என்று கிண்டல் செய்வார். ஆனால் அந்த காலக்கட்டங்களில் அவரால் பாதி மசால்வடைக் கூட சாப்பிட முடியாது . மூன்று வேளையிம் வெறும் கஞ்சி மட்டும்தான் உண்டு வந்தார். அவர் எப்பொழுதும் காலை உணவை சாப்பிடுவது அண்ணா அறிவாலயத்திற்கு சென்று வந்த பின்புதான் ஆனால் அன்றைக்கு அறிவாலயம் செல்வதாய் சொல்லிவிட்டு சென்றவர் பாதி வழியிலேயே வண்டியை அண்ணா நினைவிடத்துக்கு திருப்பச் சொல்லி உண்ணாவிரதத்தில் அமர்ந்து விட்டார். மதியம் போரை நிறுத்துவதாய் மத்திய அரசிடம் இலங்கை அரசு கூறிய பிறகுதான் உண்ணாவிரத்தை வாபஸ் வாங்கினார். அதைப் போல அடுத்த ஒரு வாரத்திற்கு பெரிதாக இலங்கை அரசு யுத்தத்தில் ஈடுபடவில்லை. பின்பு அந்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறியது வேறு விஷயம். இது "கலைஞரின் பேச்சை நம்பி அப்பாவி மக்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்ததனால்தான் இறந்தார்கள்" என்று சொல்பவர்களுக்கும் பொறுந்தும். இதில் அவர்களின் விமர்சணத்தில் உள்ள ஒரு பிழை என்னவென்றால் கலைஞரின் பேச்சை நம்பி யாரும் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்திருக்க வாய்பில்லை. ஒரு வாரமாய் குண்டு சத்தம் இல்லாததால்தான் வெளியே வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் பதுங்கு குழியில் தொலைக்காட்சி, ரேடியோ போன்ற வசதிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசியில் சொல்ல வருவது?
கலைஞர் இனத்துரோகி இல்லை. காங்கிரஸ் என்ற பசுந்தோல் போர்த்திய புலியிடம் ஏமாந்த வயதானக் காளை.